×

கோவையில் கார் வெடிப்பு வழக்கு 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை: பெயரை மாற்றி வெடிபொருள் வாங்கி குவித்த முபின்

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் 4 பேர் வீடுகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடித்து ஜமேஷா முபின் (29) பலியானார். இந்த விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக முபினின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறையில் உள்ள 6 பேரையும், சென்னை புழல் சிறைக்கு மாற்றுவதற்காக பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் என்ஐஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அனுமதி கிடைத்ததும் அவர்கள் புழல் சிறைக்கு மாற்றப்படுவார்கள். அதன்பின்னர் அடுத்தவாரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கோவை மாநகர போலீசார், நேற்று கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள அப்சர்கான் வீடு, கார் வெடித்த வழக்கில் பலியான ஜமேசா முபினுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகமது உசேன் வீடு, உக்கடம் அன்பு நகரில் உள்ள சாதிக் அலி மற்றும் எஸ்டிபிஐ ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் வீட்டில் சோதனை நடத்தினர். இது தவிர உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஏராளமான வீடுகளிலும் மாநகர போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் ஜமேசா முபின் பற்றிய சில முக்கிய தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
 
கார் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு ஒரு நாள் முன்பு அதிகாலையில் முபின்,  உறவினரான அப்சர்கானை வாட்ஸ் அப் காலில் அழைத்துள்ளார். தனக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், உடனே வீட்டுக்கு வரும்படியும் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து நார்மல் காலில் போன் செய்து பேசியதும் பதிவாகியிருப்பது அப்சர்கானின் செல்போனை ஆய்வு செய்ததில் தெரியவந்தது. முபின் செல்போனில் பேசும்போது, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நேரடியாக விவரத்தை சொல்லாமல் கோட் வேர்டுகளை பயன்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஜமேஷா முபின் சட்டவிரோத செயலை அரங்கேற்றுவதற்காகவும்,  பொருட்களை வாங்குவதற்காகவும் தனது பெயரை அப்துல் ரகுமான் என அனைத்து  இடங்களிலும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அந்த பெயரை பயன்படுத்தியே வெடிபொருட்களை அவர் வாங்கி குவித்துள்ளார். மேலும் அவர் ஏராளமான செல்போன்  எண்களை உபயோகப்படுத்தி வந்துள்ளார்.

கார் வெடித்த இடத்தில் அவரது ஒரு  செல்போன் சேதமானது. வீட்டில் சோதனை செய்ததில் அவர் பயன்படுத்திய சில  சிம்கார்டுகள் போலீசாருக்கு கிடைத்தது. அதனை ஆய்வு செய்து போலீசார் பல்வேறு  தகவல்களை திரட்டி வருகின்றனர். மேலும் ஜமேஷா முபின் வீடு இருந்த பகுதி,  கார் வெடித்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியின்  பதிவுகளை கைப்பற்றி என்ஐஏ விசாரணை தீவிரமாக நடக்கிறது.


Tags : Mubin , Coimbatore, car explosion, case, house of 4 people, police search
× RELATED கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 4...